பாகிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர், சீனாவின் விண்வெளி மையம் மூலமாக வரும் நவம்பர் 25 ஆம் திகதி விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பாகிஸ்தான் விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆராய்ச்சி ஆணையத்தின் (Suparco) கூட்டுடன் நரோவாலில் நடைபெற்ற உலக விண்வெளி வார நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்திற்காகப் பாகிஸ்தான் வானூர்திப்படையைச் சேர்ந்த ஜீஷன் அலி மற்றும் குர்ரம் தாவுத் ஆகிய இரு விமானிகள் பெய்ஜிங்கில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவர் இறுதிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒக்டோபர் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளிக்குத் தேர்வாகும் நபர் ‘பேலோட் ஸ்பெஷலிஸ்ட்’ (Payload specialist) ஆகச் செயல்படுவார். இவர் விண்கலத்தை பதிலாகப் பாகிஸ்தானின் அறிவியல் தொடர்பான பரிசோதனைகளை விண்வெளியில் முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்று நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் நிலவில் தரையிறங்குவதை பாகிஸ்தான் இலக்காகக் கொண்டுள்ளதாகவும், சீனாவுடனான இந்த ஒத்துழைப்பு விண்வெளி ஆராய்ச்சியில் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விவசாயம், தகவல் தொடர்பு, பருவநிலை கண்காணிப்பு, கல்வி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய துறைகளில் விண்வெளி தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுவதாகக் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அறிவியல் ஆராய்ச்சிகள் மிக அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.
பனசியா தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. விரிவான தகவல்களை உடனுக்குடன் பெற பனசியா தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களை பின்தொடரவும்.

